இலுப்பை :-
இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.
இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும்.
10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.
இம்பூறல்:-
இலைச்சாற்றைத் தடவி வர சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.
வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட அனைத்து கப நோய்களும் தீரும்.
உசில்:-
உசிலம் இலையைப் பொடி செய்து எண்ணெய் முழுக்கின் போது தேய்த்துக் குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
இதன் வேர்ப்பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து நீரிலிட்டு காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 1-2 தேக்கரண்டி 3 வேளை கொடுக்க குழந்தைகளின் அள்ளு மாந்தம் குணமாகும்.
ஒதியன்:-
ஒதியன் மரப்பட்டைக் குடிநீரால் புண், புரையோடிய புண்கள் இவற்றைக் கழுவலாம்.
ஒதிய மரத்தின் பிசினைப் பொடி செய்து 400 மி.கி. அளவு கொடுக்க இருமல் நோய் குணமாகும்.
உப்பிலாங்கொடி:-
இலையை வதக்கிப் பிழிந்த சாறு – 10 மி.லியை 10 மி.லி தாய்ப்பாலுடன் காலை, மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் மாந்தம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும்.
மாந்தத்தினால் வயிறு உப்பிகாணின் குழந்தைகளின் அரையில் இக்கொடியை கட்ட தீரும்.
ஊசித்தகரை:-
இலையை நீரிலிட்டுக் காய்ச்சி 10 மி.லி வீதம் காலை, மாலை கொடுக்க குழந்தைகள் பல் முளைக்குங்கால் ஏற்படும் காய்ச்சல் தணியும்.
விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவ படை, சிரங்கு, ஆறாப்புண் ஆகியவை குணமாகும்.
எருக்கு :-
இலையை வதக்கி கட்டிகளுக்குக் கட்ட அவை பழுத்து உடையும்
பூ – 1 பங்கு; மிளகு – 1 பங்கு, கிராம்பு – ½ பங்கு சேர்த்து மிளகளவு உருட்டிக் கொடுக்க கடின இரைப்பு உடனே தணியும்.
எழுத்தாணிப் பூண்டு :-
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி உடம்பில் தடவ சொறி, சிரங்கு இவை குணமாகும்.
வேர் – 5 கிராம் பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும்.
ஓமவல்லி / கற்பூரவல்லி :-
இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல் தொண்டைச் சதை வளர்ச்சி குணமாகும்.
இலைச்சாறுடன், சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றை நன்கு கலந்து நெற்றியில் பற்றிட தலைவலி நீங்கும்.
இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.
ஓரிதழ் தாமரை :-
இலையை நாள்தோறும் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர 40 நாளில் தாது இழப்பு, வெட்டைச்சூடு, பலவீனம் ஆகியவை தீரும்.
இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இவை மூன்றையும் 1 பிடி அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை புண், வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும்.
கண்டங்கத்திரி :-
இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும்.
கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.
கரிசாலை / கரிசலாங்கண்ணி :-
கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை, ஆகியவற்றின் சூரணம் சமன் கலந்து நாள்தோறும் காலை, மாலை ½ தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இளவயதில் தோன்றும் நரை மாறும்.
மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்து உண்ண உடல் பொன்நிறம் பெறும். அறிவு தெளிவு பெறும்.
ஊமத்தை :-
இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் ஆகியவை தீரும்.
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காதுவலி தீரும்.
இலையை நீர் விடாது நல்லெண்ணெயில் வதக்கி நாய்க்கடிப் புண்ணில் கட்ட ஆறும்.
கருவேல் :-
கருவேலம்பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.
இலையை அரைத்துப் புண்கள் மீது கட்ட விரைந்து ஆறும்.