Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!
ஃபேஸ்புக் எம்!
டெக்னாலஜியின் அடுத்த கட்டம்…
டெக்னாலஜியின் தீர்க்கதரிசியாக வலம்வரும் ஃபேஸ்புக் தற்போது தொட்டிருப்பது
ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) என்னும் உச்சத்தை. அதன் புதிய
கண்டுபிடிப்பான ஃபேஸ்புக் – எம் (Facebook M)-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு
குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தி யிருந்தாலும் உலகம்
முழுவதும் அதன் மெஸ்மெரிஸத்தில் திகைத்துப் போயிருக்கிறது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஃபேஸ்புக் மெஸன்ஜர் ஆப்புக்குள்ளேயே வலம்
வருகிறது இந்த ஃபேஸ்புக் – எம். மைக்ரோசாஃப்ட்டும் ஆப்பிளும் கூகுளும்
ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸில் முன்பே பாதம் பதித்திருந்தாலும் ஃபேஸ்புக்
அவற்றைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே சென்று நிற்கிறது என்பதே உண்மை
என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் பலர். நீங்கள் நினைத்துப் பார்க்காத
எண்ணற்ற நாம் கேட்கிற கேள்விகளுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸின்
துணையுடன் பதில் தருவதோடு, அதை ஒரு ஹ்யூமன் டச் கலந்து தருவது ஃபேஸ்புக் –
எம்-மின் சிறப்பு.
உதாரணமாக, நீங்கள் வாங்க விரும்பும் ஹெட்போனின் விலை இன்று அமேசானில் சற்று
அதிகமாக இருக்கிதே என்று ஃபேஸ்புக் -எம்-மிடம் நீங்கள் வருத்தம்
தெரிவித்தால் போதும்.
அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் விலை குறைந்த ஹெட்போனுடன் ஃபேஸ்புக் – எம் உங்களை அணுகி விடுகிறதாம்.
நீங்கள் பார்க்க விரும்பும் படத்துக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்க
வில்லையா? கவலையை விடுங்கள்; அடுத்த ஆறு நிமிடத்தில் ஃபேஸ்புக் – எம்
உங்களுக்கான ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வதோடு மட்டும்
அல்லாமல், அதற்கான காப்பியை உங்களுக்கு மெயிலில் அனுப்பவா என கேட்கவும்
செய்கிறது. ‘சரி’ என்று நீங்கள் அனுப்பிய அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள்
உங்கள் இன்பாக்ஸில் மெயில் இருப்பது உறுதி என்கிறார்கள்.
உங்கள் காதலிக்கு ஒரு கவிதை எழுதித் தர சொன்னால், அடுத்த இரண்டு
நிமிடங்களில் நச்சென்ற கவிதை எழுதித் தந்து அசத்துகிறதாம் இந்த ஃபேஸ்புக்
-எம். இதில் ஆச்சர்யத்தின் உச்சகட்டமாக நீங்கள் ஏதேனும் ஒரு பிரபலத்தை
வரைந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல ஆசைப்பட்டால், அந்தப்
பிரபலத்தையும் வரைந்து அதனருகில் ‘ஹேப்பி பர்த்டே’ என்று எழுதி
வைத்துவிடுகிறதாம். (ஃபேஸ்புக் – எம் தொடங்கப்பட்ட புதிதில் தான் வரைந்த
படங்களில் M என்று கையெழுத்திட்டு வந்ததாம். இப்போதுவரும் படங்களில் அந்த
M-ஐக் காணவில்லையாம்!).
இதைப் பார்த்த சில குசும்பர்கள், ஃபேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜகர்பெர்க்கை
ஒரு எரிமலையின் உச்சியில் நிற்பதைப் போல் வரைந்து கொடுக்கச் சொன்னார்கள்.
எரிமலையின் உச்சியில் ஒரு மனிதன் நிற்பதைப் போன்ற படத்தை வரைந்து அதனருகில்
அவ்வாறு வரையச் சொன்னவர்களின் பெயரை போட்டுவிட்டதாம்.
அமெரிக்காவில் சில ஆயிரம் பேர் வசிக்கும் அந்த பே (Bay) ஏரியாவில் மட்டுமே
இந்த ஃபேஸ்புக் – எம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களில்
சிலர் கேட்கும் படத்தை வரைந்து தரலாம்; கவிதையை எழுதிக் கொடுக்கலாம்.
ஆனால், உலகெங்கும் மூலைமுடுக்குகளில் உள்ள பல கோடிக்கணக்கானவர்கள்
கேட்டால், இப்படி வரைந்து கொடுப்பது சாத்தியமா என்கிற கேள்வி
எழுகிறதில்லையா?
ஃபேஸ்புக் இதற்கும் பதில் வைத்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் அந்த
ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸானது, நம் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளையும்
கவனித்து நம் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை வளர்த்துக்கொண்டே
வருமாம்.
அதாவது, நம்மைப் பற்றிய டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். உங்களது
ப்ரிஃபரன்ஸ்களை நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யவேண்டியதில்லை. நாளாக
நாளாக அவற்றை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ளுமாம் இது.
இதனை ‘டீப் லேர்னிங் டெக்னாலஜி’ என்கிறது ஃபேஸ்புக்.
நிறை என்று இருந்தால் குறை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யுமல்லவா? இந்த
ஃபேஸ்புக் – எம் சில இடங்களில் தடுமாறிப் போகிறதாம். குறிப்பாக, பெயரில்
பெரிதாகவே குழம்புகிறதாம். உதாரணமாக, ஒரே பெயரில் இரண்டு நண்பர்கள்
இருந்தால், யாரிடம் எதை சொல்வது என்பதில் இந்த எம்-முக்கு குழப்பம்
வருகிறது. தவிர, அரசியல் பற்றியோ, சர்ச்சையான விஷயங்கள் பற்றியோ இந்த
எம்-மிடம் கேள்வி கேட்டால், பதில் எதுவும் கிடைக்காது.
இதில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க ட்ரைனர்ஸ் (Trainers) என்பவர்களை
நியமித்திருக்கிறது ஃபேஸ்புக். இந்த எம்-மின் செயல்பாடுகளை பொதுவாக நான்கு
நிலைகளாகப் பிரிக்கிறார்கள். முதல் நிலையில், நாம் எழுப்பும் கேள்வி உள்ளே
செல்லும். இரண்டாவதில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அதற்கு பதில் தரும்.
மூன்றாவதாகத்தான் இந்த ‘ட்ரைனர்’கள் வருவார்கள். இவர்கள் ஆர்ட்டிஃபிஷியல்
இன்டலிஜென்ஸ் தரும் பதில்களை சரி பார்க்கிறார்கள். சமயத்தில் நமக்கு
தேவைப்படும் பதில்களை இவர்களே எழுதித் தருகிறார்களாம். (கவிதை எழுதுவதும்
படங்கள் வரைவதும் இவர்களே என்று கூறுகின்றனர்). இவ்வாறு அவர்கள் அளிக்கும்
பதில்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பார்த்துக் கற்றுக் கொள்கிறதாம்.
நான்காவது நிலையில்தான் பதில் நம்மை அடைகிறது.
ஆக, நம் எல்லா விஷயங்களையும் ‘ட்ரைனர்’களே செய்தால், பிறகு
ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது எதற்கு என்று பலர் ஃபேஸ்புக்கை
விமர்சிக்கின்றனர். ஆனால், ஃபேஸ்புக்கோ, ஒரு குறுகிய பகுதி மட்டுமே
இவர்களால் செய்யப்படுகிறது என்று சொல்கிறது.
லேட்டஸ்ட் டெக்னாலஜி என்கிற அளவில் இந்த ஃபேஸ் – புக் ஆர்வமூட்டும்
விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது நடைமுறையில் என்னென்ன சிக்கல்களை
சந்திக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்!