இரட்டுறமொழிதல் அணி

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் , சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும்.

எடுத்துக்காட்டு

திருக்குற்றாலக் குறவஞ்சியில் உள்ள பின்வரும் பாடலில் இவ் அணியைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.
      பல்லவி
கண்ணி கொண்டு வாடா-குளுவா
கண்ணி கோண்டு வாடா!
மீறும் அலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
   வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது
   அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
   தாமுங் கொண் 
டார்சைவர் தாமுங் கொண்டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
   பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி)

விளக்கம்

குற்றாலத்தில் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் வலசை வந்து மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் சிங்கன் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தன் நண்பனைக் கண்ணி கொண்டுவரச் சொல்கிறான். இவ்வாறு செய்வதில் தவறில்லை எனச்சொல்லும் வகையில் அமைந்த இப்பாடலின் நேரடிப் பொருள் பொதுவான அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருந்தாலும் அதன் உள் மறைபொருள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது. இப்பாடல் இவ்வகையில் நயத்துடன் அமைந்துள்ளது.
நேரடியான பொருள்
வடிவழகிலே அனைவரையும் மிஞ்சும் இலஞ்சி நகர்க் குறத்தியின் மணாளன், செவ்வேளாகிய குறவன் தனது முதல் வேட்டைக்குச் சென்றான். அம்முறை ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் அவனுக்கு ஒரு கொக்கு அகப்பட்டது. அதை அவித்து ஒரு சட்டியிலே குழம்பாகச் சமைத்தான். அதனை மறையோதும் பிராமணர்களும், சைவர்களும் உண்டனர். தவப்பேறுடைய முனிவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதனால் மறுப்பேதும் சொல்லாமல் வேட்டையாடுவதற்குக் கண்ணியை எடுத்துக்கொண்டு வாடா குளுவா!
உட்பொருள்
முருகன் (குறவன்) சூரனாகிய மாமரத்தைத் (கொக்கைத்) தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளில் வென்றான். அது சட்டித் திருநாள் எனப்படும். சாறு என்றால் திருவிழா எனும் பொருளும் உண்டு. அச்சட்டித்திருநாளை அனைவரும் கொண்டாடுவர். இவ்வாறான உட்பொருளைக் கவிஞர் சுவைபட உரைத்துள்ளார்.

எடுத்துக்காட்டு உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது.உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். உவம உருபு வெளிப்பட வருவதில்லை.
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட வரவில்லை.

இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

எடுத்துக்காட்டு

அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது.

இங்கே வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி

வேற்றுமை அணி

தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.

எடுத்துக்காட்டு

     அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
     'திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
     மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
     தேய்வர் ஒரு மாசுறின்'
இச்செய்யுளில் சான்றோருக்கும் திங்களுக்கும் முதலில் ஒற்றுமை கூறிப் பின்னர் வேற்றுமைப் படுத்தியுள்ளது.

வஞ்சப்புகழ்ச்சியணி

வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

எடுத்துக்காட்டுகள்

புகழ்வது போல் இகழ்தல்

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
திருக்குறள் - திருவள்ளுவர்
"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

இகழ்வது போல் புகழ்தல்

பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
புறநானூறு பாடியவர்: கபிலர்
"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)

விகடராமன் குதிரை

முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
நூல்: தனிப்பாடல், பாடியவர்: காளமேகம்
விகடராமன் என்பவர் ஒரு மெலிந்த குதிரையையும் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது. எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு, ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது, மூன்று பேர் வேண்டும்.அப்போதும் அந்தக் குதிரை ஓடிவிடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் தள்ளவேண்டும். இப்படி ஐந்து பேரால் ‘ஓட்டப்படும்’ அந்தக் குதிரை, அதிவேகமாக ஓடும், மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும்.
’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்

தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

எடுத்துக்காட்டுகள்

எ.கா.1:
     போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
     வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                               சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

எ.கா.2:
     தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
     கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை 
     வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
     கூவினவே கோழிக் குலம். 
                               நளவெண்பா
விளக்கம்:
நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.

எ.கா.3:
     காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
     பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம்
     அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
     ஒழிக்கின்ற தென்னோ உரை. 
                               நளவெண்பா
விளக்கம்:
நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.

உருவக அணி

உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும். இது உவமை அணியின் மறுதலை.
விதி:
   "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்".
எடுத்துக்காட்டு
இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்.
  • பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
  • மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
எடுத்துக் காட்டுகள்
·         உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
·         உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
·         உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
·         உருவக அணி - புலி வந்தான்
·         உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
·         உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
·         உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
·         உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)

உவமையணி

 உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.

சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

"பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை"

திருக்குறள் உள்ள ஒரு குறளும் உவமை அணியை எடுத்து காட்டுவன. இத்தொடரில் வரும் உவமை உருபு அற்றே.
"இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்"

அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
  1. தன்மையணி
  2. உவமையணி
  3. உருவக அணி
  4. பின்வருநிலையணி
  5. தற்குறிப்பேற்ற அணி
  6. வஞ்சப் புகழ்ச்சியணி
  7. வேற்றுமை அணி
  8. இல்பொருள் உவமையணி
  9. எடுத்துக்காட்டு உவமையணி
  10. இரட்டுறமொழிதலணி
தன்மை நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளபடி உள்ளதாக விளக்கும் சொற்களால் அமைவது. இது இயல்பு நவிற்சி அணி எனவும் கூறப்படும்.

இருந்து முகந் திருத்தி
ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப
வருந்தி ஆடினாள் பாடினாள்
ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்
இக்கவிதை வரிகளில் உருவக அணியோ அன்றி உவமை அணியோ இல்லாததைக் காண முடிகிறது.