உலக நீர் தினம் மார்ச் 22 2016 (WORLD WATER DAY!!!)
1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும்
அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட
சிபாரிசையடுத்து மார்ச் 22ம் தேதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை
பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக இத்தினம்
அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற
ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா
வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த
உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு
அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும்
தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப்
பொருளாகவும் கூட மாறிவிட்டது.
உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை
விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என
புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப்
பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே,
அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப்
பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.
எனவே, நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள
வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து
வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெற, பார் வளம் பெற நீர் வளம்
காப்போம் என இந்த தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.

No comments:
Post a Comment